வியாழன், 25 அக்டோபர், 2012

சாதி மறுப்பு திருமண ஜோடிக்குப் பாராட்டு!!


வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் அக்.24 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்ட பாலமுருகன், ஆனந்தி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

பாலமுருகன் ஆலங்குடி கடைவீதியில் கடை வைத்திருக்கிறார். அந்தக் கடையில் பணியாற்றி வந்த ஆனந்தி என்ற பெண்ணும் இவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். ஆனந்தி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களது காதல் குறித்து அறிந்த சாதி ஆதிக்க வெறியர்கள் பாலமுருகனை மிரட்டியுள்ளனர். இதை பொருட்படுத்தாமல் பாலமுருகன், ஆனந்தியை திருமணம் செய்திருக்கிறார்.

சாதி ஆதிக்க வெறியர்களின் மிரட்டல் காரணமாக இருவரும் தலைமறைவாயினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இவர்களைத் தொடர்பு கொண்டு, காவல்துறையில் புகார் கொடுக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் இவர்களைப் பாராட்டி கவுரவித்த ஏ.லாசர், சாதி மறுப்புத் திருமணங்கள் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்றும், இந்தத் தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்!!

உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்
ஹரியானா முதல்வரிடம் மாதர் அமைப்புகள் வலியுறுத்தல்
 
புதுதில்லி, அக். 20-ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக, அதிலும் தலித் பெண்களுக்கு எதிராக பல்வேறுவித மான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை செய்திடும் கயவர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட பல்வேறு மாதர் அமைப் புகள் ஹரியானா முதல்வரிடம் கோரியுள்ளன.ஹரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கொடுமைகள் குறித்தும், அதற்கு எதிராக 15ஆம் தேதி நடை பெற்ற பேரணி மற்றும் 17ஆம் தேதி ஹரியானா முதல்வருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கள் குறித்தும் அனைத்து மாதர் அமைப்புக ளின் சார்பில் வியாழனன்று மாலை புதுதில்லி யில் உள்ள பெண் பத்திரிகையாளர் அணி அலு வலகத்தில் செய்தியாளர்கள் கூட்டம் நடை பெற்றது. அக்கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமனும் பல்வேறு மாதர் அமைப்புகளின் தலைவர்களும் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

“ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் தலித் பெண்களுக்கு எதிராக மிகவும் கொடூரமானமுறையில் பாலியல் குற்றங்களில் கயவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஹரியானா மாநிலம், ரோஹ்தாக் நகரில் அக்டோபர் 15 அன்று அனைத்து மாதர் அமைப்புகளின் சார்பிலும் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹரியானா மாநில அரசு, இவ்வாறு பேரணியாக வரும் பெண்களின் ஜனநாயகக் குரலுக்குச் செவி மடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக குண்டாந்தடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் வீச்சு என அடக்கு முறையை ஏவிவிட்டது. மனு கொடுக்கச் சென்ற மாதர் அமைப்பின் தலைவர்களை, மாவட்ட ஆட்சியரும் பார்க்க மறுத்துள்ளார். அதனை அடுத்து பெண்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரே 17ஆம் தேதியன்று மாதர் அமைப்புகளின் தலைவர்களை ஹரியானா முதல்வர் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் பெண்கள் தர்ணாவை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.17ஆம் தேதியன்று சண்டிகரில் முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவையும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா புக்கலையும் மாதர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தார்கள்.அவர்களிடம் ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்த அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்காமல் விடப்பட மாட்டார்கள்’ என்ற உறுதிமொழியை முதல்வர் ஹூடா அளித்தார். பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு பாதிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு வரும் பெண்கள் தரும் புகார்களை காவல்துறையினர் வாங்க மறுக்கும் நிகழ்வுகளை மாதர் அமைப் பினர் சுட்டிக்காட்டியபோது, இதுதொடர்பாக அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் வழி காட்டும் நெறிமுறைகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தந்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் புரிந் தோருக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிடும் வகை யில் விரைவு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மாதர் அமைப் பினர் கோரியபோது, பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவ்வாறு நீதிமன்றங்கள் திறந்திட நடவடிக்கை எடுப்ப தாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டப் பஞ்சாயத்துக்கள் தொடர்பாக மாதர் அமைப்பினர் முறையிட்டபோது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க முதல்வர் முன்வராததோடு மட்டுமல்லாமல், தட்டிக் கழிக்க முயற்சித்தார்.முன் அனுமதி பெற்று பேரணியாக வந்த பெண்கள் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக குண்டாந்தடியால் எவ் வாறு தாக்கலாம் என்று மாதர் அமைப்பினர் முதல்வரிடம் கேட்டபோது, முதல்வர் சரியான பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

மேலும் அன் றைய தினம் பெண்கள் பலருக்கு எதிராக காவல்துறையினர் பல்வேறு குற்றப்பிரிவு களின்கீழ் வழக்குகள் பதிவு செய்திருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாதர் அமைப்பினர் வலியுறுத்தியபோது, அதற்கும் சரியானமுறையில் முதல்வர் பதில ளிக்காமல் மழுப்பிவிட்டார்.இந்நிலையில் பெண்களுக்கு எதிராக ஹரி யானா மாநிலத்தில் மட்டுமல்ல, மேற்கு வங்கம், கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் குற்றங் கள் அதிகரித்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த இருக்கிறோம். இவ்வாறு மாதர் அமைப்பின் தலைவர் கள் கூறினார்கள்.

வியாழன், 18 அக்டோபர், 2012

காந்தி காலனியில் தீண்டாமைச்சுவர்!!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், தென்னாமல்லூர் ஊராட்சிக்குட்பட்டது தென்னமல்லூர் கிராமம். இங்குள்ள காந்தி காலனியில் 130 தலித் அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பிரதான சாலைக்கும், பேருந்து நிறுத்தத்திற்கும் செல்ல "முதல் நடுவழி (SF No. 56/34)" என்ற வழியை அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வழியை தங்களின் சொந்த இடம் என்று சொல்லிக் கொண்டு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அருந்ததிய மக்கள் அந்த வழியைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதே அதற்கான காரணமாக இருந்தது. ஆனால், அது பொது வழித்தடம் என்று தெரிய வந்தபிறகு, ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருக்கும் வேலி அகற்றப்பட வேண்டும் என்று காந்தி காலனி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

அக்டோபர் 2 அன்று நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். ஆனால், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் வேலியை அகற்றாததோடு, தற்போது சுவர் ஒன்றையும் எழுப்பியுள்ளார். தலித் அருந்ததியர் மக்களை சாதி ரீதியாக கீழானவர்கள் என்ற பார்வையோடு சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த தீண்டாமைச்சுவர் உடனடியாக அகற்றப்படுவதே பொருத்தமானதாகும். மேலும், ஆக்கிரமிப்பு வேலியும் அகற்றப்பட்டு, அருந்ததிய மக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பாதை உடனடியாகத் திறந்துவிடப்பட வேண்டும். எந்த ஊரில் தீண்டாமை என்றாலும் உடனடியாகத் தலையிடும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பபு முன்னணி சார்பில் நான் மற்றும் அப்பகுதி மக்கள் சுவரைப்பார்த்து ஆய்வு செய்தோம். முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், மாவட்ட நிர்வாகி ஷீலாராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர். 

வெள்ளி, 12 அக்டோபர், 2012

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் பிள்ளையார்!


தருமபுரி நகரில் காந்தி நகருக்கும் அம்பேத்கார் நகரருக்கும் இடையே உள்ள தீண்டாமை சுவற்றை அகற்றவேண்டுமென தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள் ளது.தருமபுரி நகராட்சிக் குட்பட்ட காந்திநகரும் அம் பேத்கார் நகரும் அருகாமை யில் உள்ளது. காந்திநகரில் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த மாது என்பவரது மனைவி எம். காஞ்சனா நக ராட்சியின் அனுமதிபெற்று வீடு கட்டி வருகிறார். இந்த மனைக்கு செல்ல பிரதான வழி காந்திநகர் இரண்டா வது குறுக்கில் உள்ள நக ராட்சி பொதுச் சாலையாகும்.

காஞ்சனா வீடுகட்டி வரும் நிலையில் தலித் சமூ தாயத்தவர் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் நகராட்சியின் சாலையை வழிமறித்து சுமார் 7 அடி உயரம் 15 அடி நீளம் கொண்ட தீண்டாமை சுவர் எழப்பியுள்ள னர். தீண் டாமைசுவரை மறைப்பதற் காக சுவரையெட்டி வினா யகர் சிலைவைத்து கோயில் கட்டிவருகின்றனர்.இச்சூழ்நிலையில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஏ. குமார், டி. எஸ். கவிதா, நாகைபாலு, டி. சுப்பிர மணியன், கனகசபை ஆகி யோர் இந்த சுவரை நேரில் பார்வையிட்டனர். நக ராட்சி சாலையில் இந்த சுவரை கட்டியிருப்பது சட்ட விரோதமானது என்ற அவர்கள், உடனே நகராட்சி நிர்வாகம் தலை யிட்டு தீண்டாமை சுவரை அகற்றி தலித்மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர். நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.

புதன், 10 அக்டோபர், 2012

இருளர் மக்களின் பாதை ஆக்கிரமிப்பு


தருமபுரி அருகே உள்ள தடங்கம் கொத்தடிமை காலனி இருளர் இன மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து கட்டப் பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற் றக் கோரி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.தருமபுரி வட்டம் தடங் கம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தடிமை காலனியில் இருளர் இனத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த அந்த மக்களை மீட்டு தடங் கம் அருகே குடி அமர்த்தப் பட்டது. பிறகு, 1997 ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியரால் பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடும் கட்டி கொடுக்கப்பட்டது.மேலும், சேலம்- ஓசூர் புற வழிச் சாலையில் அமலா பள்ளி அருகிலிருந்து கொத் தடிமை காலனி, அரசுக்கு சொந்தமான வனப்பகுதி வரைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 அடி அகல சாலை வசதியும் செய்து தரப்பட்டது. சாலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டது அரசு ஆவணத்திலும் உள்ளது.ஆனால், இருளர் கால னிக்கு அருகில் உள்ள நில உரிமையாளர் அந்த சாலை யை ஆக்கிரமித்துக் கொண் டுள்ளார். நடைபாதை அள வுக்கு மட்டுமே இடத்தை விட்டு நீண்ட உயரத்திற்கு கருங்கல்லில் சுவரை எழுப் பியுள்ளார். இதனால், சாலை யின் அளவு குறைந்துவிட்ட தால் 108 ஆம்புலன்ஸ் வாக னம்கூட கிராமத்திற்குள் நுழைய முடிவில்லை. இரு சக்கர வாகனத்தை தவிர வேறு எந்த வாகனமும் செல்ல முடிவதில்லை. ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருளர் இன மக் களை மிரட்டியுள்ளார். இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப் போது அந்த சுவர் தீண் டாமையின் ஒரு வடிவமாக உள்ளதை காண முடிந்தது.ஆகவே, இந்த சுவரை இடிக்க வேண்டும், சுடுகாடு வசதிகூட இல்லாமல் அவ திப்படுவதால் உடனடியாக சுடுகாடு அமைத்துக் கொடுக்க வேண்டும், சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி கள் செய்துதர வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. குப்புசாமி தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டத் தலைவர் சி. இராமன், பொருளாளர் டி. மாதையன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஏ. குமார், எம். முத்து, தருமபுரி ஒன்றியச் செயலாளர் டி.எஸ். ராமச் சந்திரன், நல்லம்பள்ளி ஒன் றியச் செயலாளர் எம். ராஜேந்திரன், மாதேஸ், கே. என். மல்லையன், கே. ஆர். சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

கல்லூரி மாணவி காயத்ரி மரணம்..!! சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிடு


திருச்செங்கோடு விவே கானந்தா கல்லூரி மாணவி காயத்ரி மரணம் குறித்து சிபி சிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலி யுறுத்தி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் உ. வாசுகி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், சிபிஎம் மாவட்ட செயலாளர் எ.ரங்கசாமி, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கே.எஸ்.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில செயலாளர் கே. கணேஷ், ஆதித்தமிழர் பேர வை நிதி செயலாளர் நீல வேந்தன், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் சுப.இளங்கோ ஆகியோர் கண் டன உரையாற்றினர். விவேகானந்தா கல்லூரி யில் தொடர்ச்சியாக நடை பெறும் மரணங்கள் குறித்து முழு விசாரணை செய்ய வேண்டும். மாணவி காயத்ரி மர ணம் குறித்து விசாரணை கோரி நியாயமான முறையில் அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்; அமைதியாகப் போராடிய மக் கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.

ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எ.ஆதிநாராயணன், விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், இந்திய தொழிற் சங்க மைய மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.செங்கோடன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜெயமணி, மாணவர் சங்க மாவட்ட தலைவர் எ.டி.கண் ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொரு ளாளர் பி.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தலித் மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு

விழுப்புரம் மாவட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் தேவராஜ் என்பவரின் 3 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை 1997 ஆம் ஆண்டு ஆதிதிரா விட நலத்துறை நில எடுப்பு செய்து வீட்டு மனைகளாக பிரித்து 99 தலித் குடும்பங் களுக்கு வழங்கியது.ஆனால், ஆதிக்க சாதியை சேர்ந்த அந்த நில உரிமை யாளர் தேவராஜ், தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவ தால் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின் றனர். இந்த பிரச்சனை குறித்து தகவல் அறிந்த ஆர். ராம மூர்த்தி எம்எல்ஏ, தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக் குமரன் சிபிஎம் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

பிறகு, பாதிக்கப்பட்ட தலித் மக் களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதனடிப்படையில், சிபிஎம் திண்டிவனம் வட்ட செயலாளர் எம்.கலைச் செல்வன் தலைமையில் அப் பகுதியை சேர்ந்த தலித்த மக் களுடன் மாவட்ட ஆட் சியரை நேரில் சென்று சந் தித்து புகார் மனு அளித் தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதி கொடுத்தார்.இதனையடுத்து, 2 நாட் களில் 99 குடும்பங்க ளுக்கும் உடனடியாக மனைப் பிரிவு களை அளந்து கல் நட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வங்கந் தூர் கிராம நிர்வாக அலுவ லர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்துவதாக அலுவ லகர்கள் தெரிவித்தனர்.


இரட்டைச் சுடுகாட்டை எதிர்த்து போராட்டம்...!!


நாகை வட்டம் சிக்கல் மற் றும் புதுச்சேரிக்கு அருகே உள்ள மேல விக்னாபுரத்தில் ஆதிக்கச் சாதியினருக்காக தனியாக ஒரு சுடுகாடு ஏற் படுத்துவதை எதிர்த்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் ஞாயிற்றுக் கிழமை அன்று மேலவிக்னா புரத்தில் மாபெரும் ஆர்ப்பாட் டத்தில் இறங்கினர்.மேல விக்னாபுரத்தில் ஏற் கனவே ஒரு பொது மயானம் உள்ளது. இதனை தலித் மக் களும் அவ்வூரின் மற்ற சாதி யினரும் தொடர்ந்து பயன் படுத்தி வருகின்றனர். ஆனால், சாதி வெறியர் சிலருக்கு தங் களுக் கென்று ஒரு தனி மயா னம் வேண்டும் என்று கூறி வரு கின்றனர். இந்நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்த லில் புதுச்சேரி ஊராட்சிமன் றத் தலைவர் தேர்தலில், சிபிஎம் சார்பில் போட்டியிட்ட எஸ்.என். ஜீவாராமனை எதிர்த்து அதி முக சார்பில் இளவரசன் என்பவர் போட்டி யிட்டு வென்றார். இவரும்ஒரு தலித்துதான். தேர்தலில் வெற்றி பெற, தான் ஜெயித்தால் மேல் சாதியின ருக்காக தனிமயா னம் ஒன்று ஏற்படுத்தி தருவ தாக வாக்குறுதி அளித்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டார். தனது நன்றிக் கடனாக, ‘தாய்த் திட்ட’த்தில் தனியொரு மயானம் கட்டத் துவங்கினார்.இதனை அறிந்த தீண் டாமை ஒழிப்பு முன்னணியி னர், சாதியக் கொடுமைகளை வேரறுக்கப் போராடிய செங் கொடி இயக்கத்தின் மாபெரும் தலைவர் பி.எஸ்.ஆர். நினைவு நாளாகிய செப்டம்பர் 30 ஞாயிற் றுக்கிழமையன்று, 700க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.காத்த முத்து தலைமை யில், இரண் டாவது மயானம் கட்டப்படு வதை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.இதில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண் களும் கலந்து கொண்டனர்.

இந்த தகவலறிந்து நாகை வட்டாட்சியர் எல்.சம்பத்குமார் மற்றும் சில அதிகாரிகள் தலத் திற்கு வந்து, போராட்டத் தலை வர் எம்.காத்தமுத்து மற்றும் இயக்கத் தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினர். தனி மயானம் கட்டப்பட மாட் டாது என்று உறுதியளித்த னர். இதனிடையே, நாகை வரு வாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், எம்.காத்த முத்துவுடன் செல்போனில் தொடர்புகொண்டு, தனி மயா னம் கட்ட அனுமதி அளிக்கப் படாது என்று உறுதியளிக் கவே, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.அரசு அதிகாரிகளால் தரப் பட்டுள்ள இந்த வாக்குறுதி களை மீறி, ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன்,மீண்டும் மயானம் கட்டும் முயற்சியில் இறங்குவாரானால், புதன் கிழமை அன்றும் அல்லது தொடர்ந்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினரின் இந்தப் போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.காத்த முத்து தெரிவித்தார்.

ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை!!!



மதுரை, அக்.1-மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லெ. கொட்டாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலை வரான அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பொ.ஜனகருக்கு எதிராக தொடரும் மிரட்டல்கள், நிர்வாக ஒத்துழைப்பின் மைக்கு எதிராக பல முறை புகார் கொடுத் தும், வழக்குப்பதிவு செய்தும் எந்த நட வடிக்கையும் கடந்த ஓராண்டாக எடுக் கப்படவில்லை. மக்களுக் கானப் பணியை செய்ய முடியாத போது எதற்கு இந்தப் பதவி என்ற கேள்வியை சமூகத்தை நோக்கி ஜனகர் எழுப்பியுள்ளார்.தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின்படி உள்ளாட்சி அதி காரங்களில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அந்தப்பதவிகளை அவர்கள் வகிக்க முடியாத நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மூக்கன், ராஜா, செல் லத்துரை, சேவுகமூர்த்தி,பூபதி ஆகியோ ரின் குருதி குடித்து துவங்கிய சாதிவெறி இன்னும் தணிந்தபாடில்லை. சொல்லும் இடத்தில் கையெழுத்து போடுகடந்த 2011 ஆம் ஆண்டு லெ. கொட்டாணிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் ஜனகரும், ஊராட்சிமன்ற எழுத் தர் க.முருகேஸ்வரி ஆதரவோடு சுப் பையா என்பவரும் போட்டியிட்டனர். கொட்டாணிபட்டி ஊராட்சி, இபி காலனி,குருசாமிபுரம் காலனி ஆகிய குக்கிராமங்களைக் கொண்டது. நடை பெற்ற ஊராட்சிமன்றத் தேர்தலில் ஜன கர் வெற்றி பெற்றார். ஜனகருக்கு, பர மேஸ்வரி என்ற மனைவியும், கண்ணன் என்ற மகனும், கலாவதி, பொன்லெட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். ஜனகர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்து அவர் பார்த்த போது கணக்கு பதிவேடுகள் அலு வலகத்தில் இல்லை. எழுத்தர் வீட்டில் இருந்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப் பிய ஜனகருக்கு கிடைத்தது வசவு தான். அன்று முதல் இன்று வரை மதுரை மாவட்ட ஆட்சியராய் இருந்தவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை ஐந்து மனுக்களை கொடுத்துள்ளார். 

ஆனால்,எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. உங்கள் ஊராட்சியில் என்ன நடக் கிறது என ஜனகரிடம் கேட்டதற்கு, நான் ஊராட்சிமன்றத் தலைவராக பதவியேற்ற நான் முதல் ஊராட்சிமன்ற எழுத்தர் முரு கேஸ்வரி எனக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். கணக்குப்பதிவேடுகளை அவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று விடு கிறார். வார்டு உறுப்பினர்கள் 5 பேர் எனக்கு ஆதரவாக உள்ளனர். நான் கையெழுத்துப்போடச்சொல்லும் இடத் தில் நீ கையெழுத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் உன் மீது முறைகேடாக புகார் கொடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு பதவியில் இருந்து இறக்கி விடுவேன் என்று மிரட்டினார். இந்நிலையில கடந்த 24.12.2011 அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இத்தகவலை கேள்விப்பட்ட நான் தே.கல்லுப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கிராமசபைக் கூட் டம் நடத்துவதற்கான தகவல் கிடைக்க வில்லை என்று கூறியதற்கு, ஊராட்சி மன்ற எழுத்தரிடம் தகவல் தெரிவித்த தாகக் கூறினார். அவரிடம் எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்று கேட்ட தற்கு, உனக்கு எதற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டார். இந்த கிராமசபைக் கூட்டம் நடந்ததாகவும் இக் கூட்டத்தில் இந்திரா நினைவு குடி யிருப்புத் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வீடுகளும், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வீடும் வழங்கத் தீர்மானம் போட்டதாகவும் அதில் என்னை கையெ ழுத்துப்போடச்சொன்னார்கள். நான் மறுப்பு தெரிவித்தேன்.

அதற்கு எழுத்தர் மிரட்டினர். இதுகுறித்து 4.1.2012 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத் தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. போலி ரசீது மூலம் வசூல்இதே போன்று எனது ஆலோசனை யின்றி கொட்டாணிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த தனது சமுதாயத்தைச் சேர்ந்த இருவரை எழுத்தர் நியமனம் செய்தார். கடந்த மார்ச் மாதம் மாதாந்திரக் கூட்டம் 19.3.2012 அன்று நடைபெறும் என்ற பதிவுத் தபாலை எழுத்தருக்கு அனுப்பினேன். அவர் உள்ளிட்ட அவருடைய ஆதரவு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வர வில்லை. 5.4.2012 அன்று மாதாந்திரக் கூட்ட தகவலை பதிவுத்தபால் மூலம் எழுத்தருக்கு அனுப்பி வைத்தேன். அதை யும் திருப்பி அனுப்பி விட்டார். தொடர்ந்து நான் திட்டமிடும் எந்தக் கூட்டத்திற்கும் எழுத்தர் மற்றும் அவரது ஆதரவு உறுப் பினர்கள் வருவதில்லை. இதனால் எந்த வொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட முடியவில்லை. எனது அனுமதியில் லாமலே வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி ரசீது புத்தகத்தில் எனது கையொப்பம் போல் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து வசூலித்து வருகின்றனர். இது குறித்தும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றும் என்னை செயல்பட விடாமல் தடுக்கும் சாதி ஆதிக்கவாதிகளிடம் இருந்து தொடர்ந்து கொலைமிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து தே.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் 19.7.2012 அன்று புகார் கொடுத்தேன். வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தப் புகாரை வாபஸ் பெறக் கோரி கடந்த 25.9.2012 அன்று எனக்கு ஒரு தபால் அனுப்பப்பட்டுள்ளது. தே. கல்லுப்பட்டி அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்த கே.சுந்தரேசன் என்பவர் கையெ ழுத்தில் வந்த அந்த கடிதத்தில், காவல் துறை மேலதிகாரிகள் எங்களிடம் உள்ள தால் மனுவை வாபஸ் பெற்று விடு. இல்லையென்றால் சாதியை அழித்து கோவிலுக்குள் நுழையவிடமாட்டோம் என்று மிரட்டி கடிதம் எழுதியுள்ளனர். இப்படி தொடர்ந்து வரும் மிரட்டலாலும், வாக்களித்த மக்களுக்கு செயல்பட முடியாததாலும் எனது பதவியை ராஜி னாமா செய்வதைத் தவிர வேறுவழி யில்லை என்று கூறிய ஜனகர், இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக 1.10.2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன் சுல்மிஸ்ராவிடம் புகார் மனுவை அளித் துள்ளார். இந்த புகாருக்காவது நடவ டிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.- ப.கவிதா குமார்

தீண்டாமை சுவரை அகற்றுக...



தருமபுரி மாவட்டம் சேக்காண்டஹள்ளி அருந்த தியர் குடியிருப்பை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண் டாமை சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு வலி யுறுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கம்பைநல் லுர் பேரூராட்சிக்குட்பட் டது சேக்கான்டஹள்ளி கிராமம். இங்கு அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 30 குடும் பங்கள் தலை முறை தலை முறையாக வாழ்ந்து வருகின் றன.கடந்த 1986 ம் ஆண்டு வீட்டுமனைக்காக 1 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை நத்தமாக வகை மாற்றம் செய்து அருந்ததிய மக்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில், 15 சென்ட் நிலத்திற்கு மட் டும் பட்டாகொடுத்து வீடு கள் கட்டப்பட்டது. மீத முள்ள 90 சென்ட் நிலத்திற்கு பட்டா கொடுக்காமல் காலி மனையாகவே இருந்துவந்தது. ஏற்கெனவே, போதிய இட வசதியில்லாமல் அருந்திய மக்கள் ஒரே வீட்டில் மூன்று மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலத்திற்கு அருகா மையில் வசித்து வந்த சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்த தோடு அருந்ததிய குடும்பங் கள் வசித்து வரும் பகுதி மறைத்து 7 அடி உயரத்தில் 90 அடிநீளத்திற்கு கருங்கல் லால் சுவர் எழுப்பியுள்ள னர்.தீண்டாமையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட் டுள்ள இதனை அகற்றக் கோரிய போது சாதி ஆதிக்க சக்திகள் அருந்ததிய மக் களை மிரட்டியுள்ளனர்.மேலும், பொது கிணறை ஆக்கிரமித்து குடிநீர் எடுக் கவும் அனுமதி மறுத்து வரு கிறார்கள். அந்த மக்கள் வழி பட்டு வந்த கோயில் நிலத் தையும் ஆக்கிரமிப்பு செய்துள் ளார்கள். சாதிய ஆதிக்க சக்திகள்தான் இப்படி என் றால், கம்பைநல்லுர் பேரூ ராட்சி நிர்வாகமும் இம்மக் களுக்கு சிமெண்ட் சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர், சுடுகாட்டு பாதை என எந்த வசதியும் செய்துதர மறுத்து வருகிறது.இந்நிலையில், கடந்த 5 மாதத்திற்கு முன் தீண் டாமை ஒழிப்பு முன்ன ணியினர், இந்த கிராமத் திற்கு சென்று நேரடி ஆய்வை மேற்கொண்டனர். பிறகு, இந்த பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை யடுத்து, அதன் அடிப்படை யில் ஜூன் மாதம் 5 ம் தேதி அரூர் கோட்டாட்சியர் தலை மையில் அமைதிக் குழு கூட் டம் நடத்தப்பட்டது.


இக்கூட்டத்தில், தீண் டாமை சுவரை இடிக்கப்ப டும் என்றும் அருந்ததிய மக் களுக்கு வீட்டு மனைப் பட் டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த னர். ஆனால் நான்கு மாத மாகியும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. எனவே, கோட்டாட் சியர் தலைமையில் எடுக்கப் பட்ட முடிவுகள்படி தீண் டாமை சுவரை அகற்ற வேண்டும். வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் வெள்ளி யன்று(அக்.5) ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது.இதற்கிடையில், அரூர் வட்டாட்சியர் குணசேக ரன், வருவாய் அலுவலர் உமாராணி, கிராமநிர்வாக அலுவலர் சுதாகர் ஆகி யோர் சட்டமன்ற உறுப் பினர் பி.டில்லிபாபு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது, விரைந்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி. இராமன் தலைமை வகித் தார். மாநில பொதுச் செய லாளர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே.குப்புசாமி, பொருளா ளர் டி. மாதையன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, சிபிஎம் வட் டச் செயலாளர் எஸ்.கே. கோவிந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி. எஸ். கவிதா, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். தன லட்சுமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. குமார், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டச் செய லாளர் இ.கே. முருகன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஆர். நடராஜன், மனித உரிமை கட்சி மாநி லத் தலைவர் பி. துரைராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திங்கள், 8 அக்டோபர், 2012

கிறிஸ்தவ ஆலய சிறப்புப் பிரார்த்தனை : 6 தலித் மதகுருக்கள் புறக்கணிப்பு




இராமேஸ்வரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள திருவாடானையில் வெள்ளி விழா கொண்டாடும் கிறிஸ்தவ ஆலய சிறப்பு பிரார்த்தனையில் 6 தலித் மத குருக்கள் சேர்க்கப்படவில் லை. இதை கண்டித்து சிலர் வன்மு றையில் ஈடு பட்டதால், அங்கு பதற்றம் ஏற் பட்டது எனக் காவல் துறையினர் கூறினர்.

ஓரியூர் புனித அருளானந் தர் கிறிஸ்தவ ஆலயம் வெள்ளி விழா ஆண்டை எட்டியுள்ளது. இதன் மதகுரு சூசை மாணிக் கம் கூறுகையில், ஆலய வெள்ளி விழாவையொட்டி 200 பாதிரி யார்கள் மற்றும் கன்னி யாஸ்திரிகள் ஆலயத்தை நோக்கி ஊர்வ லமாக வந்தனர். அவர்களை தலித் கிறிஸ்தவர் கள் தடுத்து நிறுத்தி, 6 தலித் மதகுருக் களை நீக்கம் செய்த தற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். திருப்பலி பூஜையிலும், சிறப்பு பிரார்த்தனையிலும் தலித் கிறிஸ்தவ குருக்கள் சேர்க்கப் படும் வரை, விழாவை நடத்த அனுமதிக்கமாட்டோம் என அவர்கள் கூறினர் என்றார்.காவல்துறையினர் கூறு கையில், சிலர் தெரு விளக்கு களை அடித்து உடைத்தனர். அலங்காரத் தோரணங்களை அறுத்து எறிந்தனர் என்றனர்.

இந்த சூழ்நிலையில் திரு வாடானையில் பதற்றம் நீடிப்ப தால் தலித்துகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விழாக் கொண் டாட்டத்தை நிறுத்த ஆலய நிர்வாகிகள் முடிவு செய்துள் ளனர்.இதற்கிடையே தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக, இராமேஸ்வரத்தை ஒட்டிய பகுதிகளில் கறுப்புக் கொடி ஏற்றி, திருவாடானை ஆலயத் தினரின் புறக்கணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

எட்டு மையங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி நடவடிக்கை 
மாபெரும் வெற்றி 

தமிழகத்தில், அமரர் பி.சீனி வாசராவ் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் எட்டு இடங்களில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் அளித்துள்ள விபரம் வருமாறு:கீழ்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் போராடிய தோழர் பி.சீனி வாசராவ் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று நேரடி நடவடிக்கைகளை மேற் கொள்வது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி முடி வெடுத்தது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு, சேலம், திரு வண்ணாமலை, திருப்பூர், வேலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக் கல் ஆகிய மாவட்டங்களில் நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. 

காளப்பட்டி

கோயம்புத்தூர் காளப்பட்டி மாரி யம்மன் கோவிலுக்குள் அருந்ததிய மக்களும் இதர தாழ்த்தப்பட்ட மக் களும் அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழை வது என்று முடிவெடுத்து நடந்த நேரடி நடவடிக்கை வெற்றி பெற்றுள் ளது. அரை நூற்றாண்டு கால மாகவே இந்தக் கோவிலுக்குள் நுழைவது என்பது அருந்ததிய மக்க ளைப் பொறுத்தவரை வெறும் கன வாகவே இருந்து வந்தது. இன்றைய தினம் அப்பகுதி அருந்ததிய மக்க ளும் இதர பகுதி அருந்ததிய மற்றும் இதர தாழ்த்தப்பட்ட மக்களும் ஆலயத்திற்குள் சென்று வழிபட் டனர். அவர்கள் ஆனந்தக் கண்ணீ ரோடு வழிபட்டதோடு, ஆலய நுழை வுப் போராட்டத்திற்கு தங்கள் நன்றி யையும் தெரிவித்துக் கொண்டனர். உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடு தலை முன்னணி, பல வர்க்க, வெகு ஜன அமைப்புகள் உள்ளிட்ட பல் வேறு ஜனநாயக மற்றும் தலித் அமைப்புகள் பங்கேற்றன. 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங் கேற்ற இந்தப் போராட்டம் மிகவும் எழுச்சிகரமான வகையில் அமைந் தது. பங்கேற்றவர்களில் பாதிப்பேர் தலித் அல்லாத உழைப்பாளி மக் கள் என்பது குறிப்பிடத்தக்க அம்ச மாகும்.

வாவிக்கடை

ஈரோடு வாவிக்கடை அண்ண மார் - மதுரை வீரன் கோவில் அருந் ததிய சமூகத்தினரின் சொந்தக் கோவிலாகும். தனக்கு ஏன் முடி வெட்டவில்லை என்று ஒரு தலித் வாலிபர் கேட்டதற்காக கோவில் வழிபாட்டு உரிமையை ஆதிக்க சக்திகள் வன்முறை வெறியாட்டம் நடத்தி மறுத்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தக் கோவிலுக் குள் நுழைந்து வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. நேரடி நட வடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவிலுக்குள் அருந்ததிய மக்க ளோடு செல்வது என்று முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. நியாய மான இந்தக் கோரிக்கைக்கு இருந்த ஆதரவைக் கண்டு மாவட்ட நிர் வாகம் நடத்திய பேச்சுவார்த்தை யின் அடிப்படையில், செப்டம்பர் 29 ஆம் தேதியன்றே இரு தரப்பு மக்க ளும் ஒற்றுமையாக கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இரு தரப்பி லிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஒற்று மை தொடர வேண்டும் என்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

காட்டுமரக்குட்டை

சேலம் வட்டம் காட்டுமரக் குட்டை கிராமத்தில் தலித் மக்க ளுக்கு பாதை மறுக்கப்பட்டு வந் தது. நேரடி நடவடிக்கையாக பாதை அமைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநக ரத்தின் பல பகுதிகளிலிருந்து நூற் றுக்கணக்கான மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இணைந்து பாதை அமைக்கும் போராட்டத்திற்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட நிர்வாகம், தலித் மக்கள் செல்ல தடைவிதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கற்களை உடனடியாக அகற்றி விடு வது என்றும், அந்தப் பொதுப் பாதையை தலித் மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது. மேலும் மூன்று மாதத்திற் குள் இதில் சாலை அமைத்துத் தருவது என்றும் எழுத்துப்பூர்வமாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித் துள்ளது.

கலசப்பாக்கம்

திருவண்ணாமலை கலசப்பாக் கம் அம்பேத்கர் நகர் பாதை அமைக் கும் நேரடி நடவடிக்கைக்கு அறை கூவல் விடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நூற்றுக் கணக்கான மக்கள் திரண்ட நிலை யில் உடனடியாக அந்தப் பாதையை அமைத்துத் தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதிமொழி தந்தது. மேலும், பஞ்சமி நிலம் ஒன்று சம் பந்தமான பிரச்சனையிலும், அதைப் பெற்றுள்ள பயனாளிகள் நிலத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள எந்தத்தடையும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறி வித்தது.

நடுவேலம்பாளையம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையத்தில் 5.2 ஏக்கர் பஞ்சமி நிலம் சட்ட விரோதமாக தலித் அல்லாதவர்கள் கையில் உள்ளது. அந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற் பனை செய்வதற்கான வேலையும் நடந்து கொண்டிருந்தது. இதைத் தடுத்து அதை தலித் மக்களுக்கு பெற்றுத் தரும் வகையில் நேரடி நட வடிக்கைக்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வந்தது. அந்த நிலம் விற்பனை செய்யப்படு வதற்கு தடை விதித்து, அதற்கான உத்தரவை துணைப் பதிவாளருக்கு உடனடியாக அனுப்ப ஒப்புக் கொண் டனர். மேலும் அக்டோபர் 3 ஆம் தேதியன்று பஞ்சமி நிலத்தை புதிய பயனாளிகளிடம் ஒப்படைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

வாலாஜாபேட்டை

வேலூர் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை ஒட்டி தலித் மக்களுக்கான பாதையை மறித்து ஆதிக்க சக்திகளால் தீண் டாமைச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்றுவது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி விடுத்த அறைகூவலை ஏற்று ஏராளமான அளவில் மக்கள் திரண்டனர். பெரும் அளவில் மக்கள் திரள் வதைத் தடுக்க காவல்துறையின் அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட் டது. வரும் வழியிலேயே மக்க ளைக் கைது செய்வது, மிரட்டுவது போன்ற வேலைகள் நடந்தன. கைது நடவடிக்கைகளுக்குப் பிறகே ஆர்.டி.ஓ. நேரடியாக பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார். அக் டோபர் 10ஆம் தேதியன்று மாவட்ட வருவாய் அலுவலர்(டி.ஆர்.ஓ) முன் னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முழுத்தீர்வு காண் பது என்று அப்போது முடிவு செய் யப்பட்டது. அதுவரையில், தீண்டா மைச் சுவரின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு தொடர அனுமதிக்கமாட்டோம் என்றும் ஆர்.டி.ஓ உறுதியளித்தார்.

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடியில் 86 தலித் குடும்பங் களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு பட்டா வும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில் லை. இந்நிலையில் நேரடி நட வடிக்கையாக அந்த நிலத்தில் குடி யேறுவது என்று முன்னணி சார் பில் அறிவிக்கப்பட்டு மக்கள் ஏராள மான அளவில் திரண்டனர். எழுச் சிகரமாக மக்கள் திரண்டதைக் கண்ட மாவட்ட நிர்வாகத்தின் தரப் பில் ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார். பட்டாவின் நகலை மக்கள் காட்டியபோது, தள்ளிப் போடுவதற்கான உத்தியாக பட்டா வின் உண்மை நகல் இருந்தால் தான் நாங்கள் பேச முடியும் என்று இழுத்தடிக்கத் துவங்கினர். துரித மாகச் செயல்பட்ட சிலர் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பட்டாவின் உண்மை நகல்களோடு வந்ததால் அதிகாரிகள் திகைத்துப் போயினர். அந்த இடத்தை சென்று பார்வை யிட்ட பிறகே முடிவு செய்வோம் என்று அதிகாரிகள் கூறியபோது, மக்களும் சளைக்காமல், பரவா யில்லை; நாங்கள் இங்கேயே காத் திருக்கிறோம் என்று கூறினர். ஆனால் போராடும் மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத னால் போராட்டம் தீவிரமடையும் நிலை உள்ளது. 

மரியநாதபுரம்

திண்டுக்கல் மரியநாதபுரத்தில் பிரதான சாலையை அடைய தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை மறிக் கப்பட்டு சுவர் கட்டப்பட்டிருந்தது. இதை நேரடி நடவடிக்கை மூலம் அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அழைப்பு விடுத் தது. இதை அறிவிக்கும் வகையில் ஏற்கனவே அந்த சுவரைப் பார்வை யிட்டிருந்த முன்னணியின் மாநி லத் தலைவர் பி.சம்பத் பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு செப் டம்பர் 12 அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில் அச் சுவரை எழுப்பியிருந்த சௌந்தர ராஜா மில் நிர்வாகம், அந்தச்சுவரை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதியிடம் ஒப்பு தல் கடிதம் தந்தது. இதைத் தொடர்ந்து அன்றைய தினமே மக்கள் திரண்டெழுந்து அந்தச் சுவரை அப்புறப்படுத்தினர். 

கடந்த சட்டமன்றக்கூட்டத் தொடரில், தமிழகத்தில் தீண் டாமைக் கொடுமையே இல்லை என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்களுக்கு, அவர்கள் சொன்னது மகா பொய் என்பதைத் தான் இந்தப் போராட்டங்களும், வெற்றிகளும் காட்டுகின்றன. இன் னும் ஏராளமான கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இத்தகைய கொடுமை களை முழுவதுமாக ஒழித்துக்கட்ட ஜனநாயக சக்திகளை இணைத் துக் கொண்டு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும். இந்தப் போராட்டங் களில் எழுச்சியோடு பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தலித் மக்க ளுக்கும், அவர்களின் உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்கிப் போராடிய தலித் அல்லாத இதர பகுதி உழைப்பாளி மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி பாராட்டுக்களையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள் கிறது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டு மாபெரும் பேரணி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

முதல் மாநில மாநாடு

மே 28, 29 - 2010

புதுக்கோட்டை

மாநாட்டுப் பிரகடனம்

புதுக்கோட்டையில் எழுச்சியோடு நடந்தேறி வருகிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடவும், தீண்டாமைக் கொடுமைகளை வேரடி மண்ணோடு வீழ்த்தவும் உளப்பூர்வமாக உறுதியேற்கிறது.

இந்தியச் சமூகத்தின் பொருளியல் ஒடுக்குமுறையோடு சமூக ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான கவசமாக சாதியக் கட்டமைப்பை காலகாலமாய் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். இதன் பன்முக விளைவுகள் உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமை மீதும், ஒற்றுமை மீதும் எதிர்மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. பொருள் ஒடுக்குமுறையினின்று மனித குலத்தை விடுவிக்கிற போராட்டம் சமூக தளத்தில் ஒரு சேர நடைபெற வேண்டியுள்ள தேவையை இம்மாநாடு அழுத்தமாக வலியுறுத்துகிறது. இப் போராட்டக்களத்தில் கரம் கோர்க்குமாறு அனைத்து சனநாயக சக்திகளுக்கும், உழைப்பாளி மக்களுக்கும் தலித் இயக்கங்களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

இந்திய மண்ணில் சாதியக் கட்டமைப்பின் உச்சபட்ச கொடுரமாக தீண்டாமை விளங்குகிறது. பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்க்கையின ஒவ்வோர் அம்சத்திலும் தீண்டாமை நீக்கமற நிறைந்திருக்கிறது. தேநீர்க்கடைகள், சிகை திருத்தகம், சலவையகம், கோவில், குளம், ஆறு, மயானம் என எல்லா அம்சங்களிலும் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் இன்றும் நீடிக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களுக்குப் பெரும் சவாலாய் விளங்குகின்றன. எனவே, இது தலித் மக்களை இலக்குகளாக்குகிற அநீதிகள் எனும் போதும் இது குறிப்பிட்ட பகுதி மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. இத்தகு அநீதிகளை எதிர்கொள்ளாமல் சனநாயகத்திற்கான போராட்டத்தில் இம்மியளவும் நகர முடியாது. எனவே தேசத்தின் இழிவாக விளங்குகிற தீண்டாமைக் கொடுமைகளை அடியோடு ஒழிப்பதற்கு இம்மாநாடு உறுதியேற்கிறது.

தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவங்கியதிலிருந்து நடத்தி வருகிற களப்போராட்டங்கள் சமூக நீதிக்கான பயணத்தில் பெரும் நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளன. தலித் மக்களை புறக்கணிக்கிற சுவர்கள் வீழ்ந்துள்ளன. பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட மயானப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆதிக்கச் சக்தியினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இப்போராட்டங்களில் தலித் மக்கள் மட்டுமின்றி பெருந்திரளாக உழைப்பாளி மக்களும் பங்கேற்றிருப்பது எதிர்காலப் பயணத்திற்கு நம்பிக்கையூட்டுகிற நிகழ்வுகளாகும் என இம்மாநாடு பாராட்டுகிறது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடும் இக்காலத்தில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றியாகும். பட்டியலினத்தவர் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முதன்முறையாக இவ்வாண்டு மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு கிட்டியுள்ள வெற்றிகளாகும் என்று இம்மாநாடு பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகிறது.

எனினும் நமது இலக்குகளை நோக்கி நாம் வெகு தூரம் முன்னேற வேண்டியுள்ளது. ஆதிக்கச் சக்திகளின் சாதிவெறி ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்றைக்கும் மனித உரிமைகளுக்கும், மாண்புகளுக்கும் சவால் விடுப்பவையாக உள்ளன. அரசு இயந்திரமும், காவல் துறையும் வன்கொடுமைகளுக்கு எதிராக மவுனம் சாதிப்பதும், துணை போவதும், ஆதிக்கச் சக்திகளுடன் கைகோர்ப்பதுமான அணுகுமுறையும் தொடர்கிறது. இவற்றுக்கு எதிரான பரந்த திரட்டல், விழிப்புணர்வு தேவைப்படுகிறது என இம்மாநாடு அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

புதுக்கோட்டையில் கூடியிருக்கிற இம்மாநாடு

* வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டவும்
* தலித்துகளுக்கு நிலம், பட்டா உறுதி செய்திடவும்
* மனித மாண்புகளுக்கு எதிரான சாதிய ரீதியிலான பணிகளைக் கட்டாயப்படுத்துகிற இழிசெயலுக்கு முடிவு கட்டவும்
* அருந்ததியரின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை இடையறாது தொடர்ந்திடவும்
* தலித் கிறித்தவர்களை பட்டியலினத்தவர்களாக அறிவிக்க வேண்டிய இயக்கங்களை நடத்திடவும்
* பஞ்சமி நிலங்களை மீட்டிடவும்
* தனியார் துறை இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றிடவும்
* தலித் நிலுவைக் காலியிடங்களை நிரப்புவதன் மூலம் இடஒதுக்கீட்டின் உயிர்ப்பைப் பாதுகாத்திடவும்
* பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக போராடவும்
* தலித் மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுப் சிறப்புகளை வளர்த்தெடுக்கவும்

இம்மாநாடு கோடானுகோடி உழைப்பாளி மக்களைத் திரட்டிப் போராட உறுதியேற்கிறது. மனித குலத்தின் அவமானச் சின்னங்களாகத் திகழ்கின்ற தீண்டாமை வடிவங்களை அடியோடு இம்மண்ணிலிருந்து அகற்றவும் இம்மாநாடு சபதமேற்கிறது.

ஒடுக்குமுறைகள் எவ்வடிவில் அமைந்தாலும் அவை மனித குல விடியலுக்கான தடைக்கற்களே என்ற உயர்வோடும், அதற்கான புரிதலோடும் முன்னேறுவோம்! இலக்குகளை எட்டுவோம்! என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு பிரகடனம் செய்கிறது.

உற்சாகத்துடன் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் மே 28, 29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாயிலைத் திறக்க வேண்டும். இல்லையேல் நேரடி நடவடிக்கை எடுப்போம் என்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தீண்டாமைக்கொடுமைகளை வேரோடு சாய்க்க தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், நடுத்தர வர்க்க சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பை உருவாக்கின. ஆலயநுழைவு மறுப்பு, மயானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஏராளமான இயக்கங்களை நடத்தி வெற்றி கண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முறையான அமைப்பாக மாறும் வகையில் தனது முதல்மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளது.

முதல்மாநில மாநாட்டையொட்டி, மாநிலம் முழுவதும் வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றன. கீழ்த்தஞ்சை வெண்மணி, மதுரை மேலவளவு, திருப்பூர் இடுவாய் ஆகிய இடங்களிலிருந்து நினைவு ஜோதிகள் எடுத்துச் செல்லப்பட்டன. மே 28 அன்று காலையில் புதுக்கோட்டை பி.வி.ஆர். மண்டபத்தில் துவங்கிய மாநாட்டிற்கு விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமையுரையாற்றினார். அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் மீதான விவாதத்தில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முன்னாள் ஐஏஸ் அதிகாரி வி.கருப்பன் மற்றும் எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கதிர் ஆகியோரும், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்களும் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு பொதுச்செயலாளர் உ.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் கே.எஸ்.கனகராஜ் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டின் முதல் நாள் விவாதத்திற்குப்பிறகு நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் நா.முத்துநிலவன் பங்கேற்ற வழக்காடு மன்றம், புதுகை பூபாளம் கலைக்குழுவின் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்ட தீண்டாமை எதிர்ப்புக் கலைவிழா நடைபெற்றது. மாநாட்டையொட்டி ஓவியக்கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கவிதை - ஓவியக்கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாநில அமைப்பாளர் பி.சம்பத் தொகுப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டின் நிறைவாக தலித் மக்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றன. புதுக்கோட்டையின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் துவங்கிய இந்த பேரணியை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வரதராசன் துவக்கி வைததார். சந்தைப்பேட்டை, திலகர் திடல், பிருந்தாவனம் வழியாக சென்ற இந்தப்பேரணி சின்னப்பா பூங்காவில் நிறைவு பெற்றது.

பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். புதுவை சப்தர் ஹஷ்மி குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளும் இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக பி.சம்பத், பொதுச்செயலாளராககே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அமைப்பின் துணைத்தலைவர்களாக என்.வரதராஜன், இரா.அதியமான், ஏ.லாசர், எஸ்.கே.மகேந்திரன் மற்றும் கு.ஜக்கையன் உள்ளிட்ட 17 பேரும், செயலாளர்களாக க.சுவாமிநாதன், கே.ஆர்.கணேசன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி உள்ளிட்ட 17 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை உள்ளடக்கிய 98 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு வாயிலை ஒரு மாத காலத்தில் திறக்க வேண்டும் எனவும், இல்லையேல் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என்ற அறைகூவல் இந்த மாநாட்டில் விடப்பட்டது. இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் தலித் இட ஒதுக்கீடு சதவீதம் உயர்வு, தனியார் துறை இட ஒதுக்கீடு, நிலுவைக் காலியிடங்கள நிரப்பப்படுவதை வலியுறுத்தியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அமைக்குமாறு வலியுறுத்தியும், வன்கொடுமை, தீண்டாமைக்குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் கோரியும், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அரச மர வழிபாட்டிற்கும், பேருந்து நிழற்குடை அமைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் கோரியும், பஞ்சமி நில மீட்பை வலியுறுத்தியும், தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டித்தும், புதிரை வண்ணார் சமூகத்திற்கு தாமதமின்றி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், காங்கியனூர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும், தலித்துகளுக்கு நிலம், பட்டா கோரியும், தொகுப்பு வீடு பராமரிப்பு வலியுறுத்தியும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அமலாக்கத்தை கண்காணிக்க வலியுறுத்தியும், டாக்டர்.அம்பேத்கர் வரலாற்று திரைப்படத்தை திரையிட்டு ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆதித்திராவிடப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடும், தரம் உயர்த்தலும் கோரியும், தலித்துகளும் கோவில் அர்ச்சகர்களாகிற உரிமையை வலியுறுத்தியும், புதுச்சேரியிலும் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக்கோரியும், புதுவைக்கு புலம் பெயர்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கோரியும், பழங்குடி மக்கள் நில உரிமை, வன உரிமை பாதுகாக்கக்கோரியும், தலித் உட்கூறு திட்ட நிதி ஒதுக்கீட்டை நீர்த்துப்போகாமல் முழுமையாக அமலாக்குமாறு வலியுறுத்தியும், ஆதிதிராவிட நலத்துறையை செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய தேர்வாணையத் தேர்வின் பொதுப்பட்டியலில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தலித் கிறித்தவர்களை பட்டியல் இனத்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.